Sri Andal Thiruppavai 30 Pasurams PDF Download
Sri Andal Thiruppavai Pasuram in Tamil PDF. If you need Sri Andal Tiruppavai Pasuram PDF you can download it from the download link given at the end of this post.
Andal Thirupavai is a collection of 30 Tamil hymns (also known as “paasurams”) that are traditionally sung during the month of Margazhi (December-January) in the Tamil calendar. The hymns are composed by Andal, a 9th-century poetess who is revered as a saint in the Hindu tradition. Andal Thiruppavai is a part of the Divya Prabandham, a collection of 4,000 Tamil hymns that are considered to be revelations by the Alwars, a group of 12 ancient Vaishnava saints.
The hymns in Andal Thiruppavai are addressed to Lord Krishna and express the poetess’ devotion and love for him. They also contain philosophical and spiritual teachings, and are considered to be an important part of the Bhakti movement, which emphasized devotion and personal relationships with God as a means of achieving salvation. In Andal Thirupavai, Andal describes her longing for union with Lord Krishna and her desire to serve him. The hymns are written in a simple and beautiful language that has made them popular among devotees and scholars alike.
The first word of the songs.
மார்கழித், வையத்து, ஓங்கி, ஆழி மழை, மாயனை, புள்ளும், கீசுகீ, கீழ்வானம், தூமணி, நோற்றுச், கற்றுக், கனைத்திளங், புள்ளின்வாய், உங்கள், எல்லே, நாயகனாய், அம்பரமே, உந்து மத, குத்து விளக், முப்பத்து, ஏற்றகலங்கள், அங்கண், மாரிமலை, அன்று, ஒருத்தி, மாலே, கூடாரை, கறவைகள், சிற்றம், வங்கக்.
(உய்யக்கொண்டார் அருளிச் செய்தவை)
இருவிகற்ப நேரிசை வெண்பா
அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப் பாவைப் பல் பதியம்! – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, தொல்பாவை
பாடி அருள வல்ல பல் வளையாய் – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாங் கடவா வண்ணமே நல்கு!
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பாசுரங்கள் 30 | Sri Andal Tirupavai 30 Pasurams
(எட்டடிநாற்சீரொருவிகற்பக் கொச்சகக்கலிப்பா)
Thiruppavai Pasuram – 01 | மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 02 | வையத்து வாழ்வீர்காள்!
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 03 | ஓங்கி உலகளந்த உத்தமன்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 04 | ஆழி மழைக்கண்ணா!
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 05 | மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 06 | புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 07 | கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 08 | கீழ்வானம் வெள்ளென்று
கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 09 | தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 10 | நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 11 | கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 12 | கனைத்திளங் கற்றெருமை
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 13 | புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனை
புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 14 | உங்கள் புழைக்கடைத் தோட்டத்து
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்;
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்;
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 15 | எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’
‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’
‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’
‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 16 | நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய
நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;
ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 17 | அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 18 | உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 19 | குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 20 | முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 21 | ஏற்றகலங்கள் எதிர்பொங்கி
ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 22 | அங்கண் மாஞாலத் தரசர் அபிமான
அங்கண் மாஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,
அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 23 | மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 24 | அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 25 | ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 26 | மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,
சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 27 | கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா!
கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 28 | கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 29 | சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.
Thiruppavai Pasuram – 30 | வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.
Andal Vazhi Thirunamam | ஆண்டாள் வாழித்திருநாமம்
திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே
— ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை மொத்தம் 30 பாசுரங்கள். ஆண்டாள் பாடிய இப்பாடல்கள் மிகவும் பிரபலமானது, ஆண்டாள் இந்த திருப்பாவை பாடல்களை பக்தியுடன் பாடி அருளியுள்ளளால், இதை நாமும் மார்கழி மாதத்தில் 30 நாட்களும் இப் பாடல்களைப் பாடி இறைவனை வணங்கிய இறையருளை பெறுவோம்.
Leave a Reply